விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 7 ஆண்டுகளாக கடந்த 2023ம் ஆண்டு வரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் இந்த முறை பிக்பாஸ் 8வது சீசனில் நான் பங்கேற்க இயலாது என கமல்ஹாசனே அறிவித்து விட்டார்.
சினிமா படப்பிடிப்புகள் அரசியல் பணிகள் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு என ஏகப்பட்ட பிஸியில் இருந்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாமல் விலகி கொண்டார். இதையடுத்து இதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பங்கேற்றார்.
போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படத்தை விமர்சித்த விஜய் சேதுபதி, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களையும் வாரந்தோறும் நேரடியாக விமர்சித்து பேசினார். கமல் போன்ற இலகுவான அணுகுமுறை இவரிடம் இல்லை என்று பார்வையாளர்கள் விமர்சித்தனர்.
அதே நேரத்தில் அடுத்த முறை பிக்பாஸ் சீசன் 9ல் நடிகர் கமல்ஹாசனே மீண்டும் பிக்பாஸ் தொகுப்பாளராக வந்துவிடுவார் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளராக விஜய் சேதுபதியே தொடர்வார் என்பதை விஜய் டிவி நிர்வாகம் உறுதி செய்துவிட்டது.
நேற்று நடந்த டைட்டில் வின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு பிக்பாஸ் பார்வையாளர்கள்தான் காரணம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு வாரமும் எனக்குள் நிறைய மாற்றங்கள் நடந்தது. என்னையே நான் நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டேன்.
இந்த வீட்டுக்குள் முதலில் பாத்திரங்கள், பொருட்கள், பர்னிச்சர்கள் இருந்த போது சென்றேன். 2வது முறையாக இப்போது சென்ற போது அந்த பொருட்களுடன் காதல், அன்பு போன்ற உணர்வுகளும் அந்த வீட்டுக்குள் இருந்ததை உணர்ந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் விஜய் சேதுபதி பயணம் தொடரும் என்று அறிவித்த விஜய் டிவிக்கு நன்றி என்று பேசினார். இதன்மூலம் இனி அவரே நிகழ்ச்சியை தொடர்வார் என்பது உறுதியாகி விட்டது.





