கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் தொழிலதிபர்கள் நடிகர்கள் சினிமா தயாரிப்பாளர்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை அரசுக்கு நிர்ணயித்தபடி வருமான வரியை செலுத்த வேண்டும். தங்களது ஆண்டு வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாக தரவேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஒரு சிலர் தங்களது உண்மையான வருமானத்தை மறைத்துக்கொண்டு கருப்பு பணமாக அதை பதுக்கி வைக்கின்றனர். போலியான கணக்குகுளை காட்டி வருமான வரித்துறையை ஏமாற்றுகின்றனர். அதுபோன்ற நேரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளே நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத சொத்துகளை பறிமுதல் செய்கின்றனர்.
இதில் பெரும்பாலும் அதிகளவில் சிக்கிக்கொள்வது அரசியல்வாதிகள்தான். அவர்கள்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இந்தியாவில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் பல இந்நாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும் இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்பட்டு உள்ளனு.
இந்நிலையில் தற்போது சினிமா தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் மைத்ரி நவீன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். தில் ராஜூ நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.
அதே போல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். இவர், தற்போது அஜீத்குமார் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள குட்பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் அஜீத்குமார் படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கில் மற்ற முக்கிய ஹீரோக்கள் நடித்த படங்களையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இந்த சூழலில் இந்த தயாரிப்பாளர்களை வருமானவரித்துறை குறிவைத்திருப்பது தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





