தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படங்களையும், ஆக்சன் கதைகளையும் தனக்கே உண்டான பாணியில் கொடுத்து அதன் மூலம் புகழ்பெற்றவர் தான் இயக்குனர் மகிழ்திருமேனி. இவரது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் தடையற தாக்க. அருண் விஜய்க்கும் அந்த திரைப்படம் தான் பெரிய தாக்கத்தை கொடுத்தது.
ஒரு பக்கா ஆக்சன் மூவியாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், ரசிகர்களின் மனதில் கவனத்தை ஈர்க்க பலராலும் அறியப்பட்டார் மகிழ்திருமேனி. இங்கிருந்து, மீகாமன், தடம், கலகத் தலைவன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் முக்கியமான பாதையை அமைத்துக் கொடுத்தன.
இப்படியான சூழலில் தான் தற்போது அஜித்துடன் இணைந்து அவர் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இது வரும் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
படத்தில் பாடலும் மிக அருமையாக வந்துள்ளது. அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் தற்போது ரிலீசாகி இருக்கும் நிலையில் அது ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம்பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
காணாமல் போகும் தனது மனைவியை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். தி பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் இதனை படமாக்கி இருக்கிறார்கள். இப்படியான சூழலில், அந்தத் திரைப்படம் குறித்தும் தனது திரையுலக வாழ்வு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் மகிழ்திருமேனி.
அதில், தடம் திரைப்படத்தை முதலில் ஒரு பெரிய நட்சத்திரத்துடன் இணைந்து நான் பணி புரிவதாக இருந்தேன். பிறகு அந்த பேச்சுப் பாதியில் நிற்க, அருண் விஜய்யை அழைத்து கதை கூறினேன். அவருக்கும் பிடித்து போய்விட்டது. ஆனால் திடீரென அந்த பெரிய நட்சத்திரம் லைக்கா நிறுவனத்தின் கீழ் இந்த திரைப்படத்தை எடுக்கலாம் என்று கூறினார். ஆனால் நான் இங்கு அருண் விஜயிடம் பேசி விட்டேன். அதற்காக நான் அட்வான்ஸ் எதுவும் வாங்கவில்லை. இருப்பினும் அவர் கூடவே பணிபுரிந்தேன். அடுத்ததாக எனது திரைப்படம் ஒரு பெரிய நட்சத்திரத்துடன் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.





