நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான ஒரு கலைஞராக இருக்கிறார். நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆகிய நிலைகளை கடந்து இப்போது தனுஷ் இயக்குனராகவும் மாறிவிட்டார். இப்போது அவரது இயக்கத்தில் 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருவதால் இட்லி கடை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷை பொருத்தவரை எப்போதுமே பிஸியாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த லைன் அப்கள் அவருக்கு காத்திருக்கின்றன.
தனுஷ் நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய குபேரா படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதேபோல் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாக இருக்கிறது. அதிலும் நடிகர் தனுஷ் தான் இளையராஜா கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சாணி காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ராயன். தனது 50வது படத்தை நடிகர் தனுஷ் டைரக்ட் செய்து நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நடிகர் தனுஷ், இட்லி கடை படத்துக்கு பிறகு லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
கடந்த ஆண்டில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கெத்து தினேஷ் ஹரீஷ் கல்யாண் சுவாசிகா காளி வெங்கட் பாலசரவணன் ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் நடிகர் தனுஷை சந்தித்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கதை கூறியிருக்கிறார். அவர் சொன்ன கதையை கேட்டு மிரண்டு போன நடிகர் தனுஷ் உடனடியாக படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து இவர் ஒரு பிரமாதமான இயக்குனர். அவர் சொன்ன கதையைக் கேட்டு நான் மிரண்டு போய்விட்டேன். மிக அற்புதமான எதிர்காலம் இவருக்கு இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





