நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றி வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் அண்மை காலமாக வெளியாகும் திரைப்படங்கள் பலவும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. இதனை பூமி திரைப்படத்திலிருந்து நாம் சொல்லிவிடலாம். நடுவே வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
பிறகு ரவி நடிப்பில் வெளியான அகிலன் இறைவன் சைரன் ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் திரையரங்குகளை விட்டு வெளியேறின. பிறகு, இயக்குனர் ராஜேஸ் உடன் இணைந்து அவர் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்தார். இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.
ஆனால் அது ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ஆக அமையவில்லை. இப்படி அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் ஜெயம் ரவிக்கு சோதனையை கொடுத்தன. இதனைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ரவி நடித்தார். இது பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.
மற்ற நான்கு திரைப்படங்களைக் காட்டிலும் இது விமர்சன ரீதியாக ஓரளவு பேசப்பட்டது. கலவையான விமர்சனத்தை பெற்றது என்று கூட கூறலாம். ஆனால் அது படத்தின் வெற்றிக்கு துணை போகவில்லை. இதனால் காதலிக்க நேரமில்லை திரைப்படமும் ரவிக்கு கை கொடுக்கவில்லை. தற்போது அவர் மிஷ்கின் உதவி இயக்குனர் எடுத்திருக்கும் ஜீனி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதுபோக சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரவி. இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் நிச்சயம் ரவிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க டாடா திரைப்பட இயக்குனர் கணேஷ் பாபு உடன் ரவி கை கோர்த்து இருக்கிறார். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால் திடீரென அவர் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதில் சாம் சி எஸ் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை. அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்தின் பின்னணி இசையையும் சாம் சி எஸ்ஸே செய்தது குறிப்பிடத்தக்கது.





