வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். தென்காசி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம், தனுஷின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

கேப்டன் மில்லரில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட பிரபலம் சிவராஜ்குமார் மற்றும் சந்திப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். அசுரன் படத்திற்குப் பிறகு, தனுஷ் படத்திற்கு ஜிவிகுமார் இசையமைத்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பலரையும் கவர்ந்தது. மூன்று விதமான கெட்டப்பில் தனுஷ் தோன்ற, அனைவரது கைகளிலும் தெறிக்கும் துப்பாக்கி இடம்பெற்று படு ஆக்சன் மூவியாக இருப்பது டீசரில் தெரியவந்தது. வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லருக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ஒரு படம், பாலிவுட் திரைப்படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் என தொடர்ந்து கமிட் ஆகி இருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது 50வது படத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். பவர் பாண்டி திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுக்கும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் திரைப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், ஜெயராம் மகன் காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் தனுஷிற்கு அண்ணனாக எஸ் ஜே சூர்யாவும், தம்பியாக சந்திப் கிசனும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப் கிசனுக்கு ஜோடியாக அபர்ணா பால முரளி நடிக்கிறாராம். இதேபோல் தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில், 600 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதலில் எஸ்.ஜே சூர்யா, சந்தீப் கிஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தனுஷ் படப்பிடிப்பில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதிய தகவலாக, கேரளாவைச் சேர்ந்த அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





