காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு பொன்மொழியாக தான் இருக்கிறது. பலரது வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளுமே அவர்களை அடுத்தடுத்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. அதில் ஒரு வாய்ப்பை இழந்தாலும் அதே இடத்திலோ, அல்லது அதற்கு கீழேயோ சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அழகான நடிகர். உயரமும், வாட்டசாட்டமான உடல் தோற்றமும், சிவந்த நிறமும், முக லட்சணமும் கொண்ட நடிகர். சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் படமாக அமைந்தது.
அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, போஸ், வானவில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகளின்றி காணப்பட்டார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் நண்பன்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க அவரது நெருங்கிய நண்பர்களாக ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஸ்ரீகாந்துக்கு கிடைக்கவில்லை. இதனால் திறமை, அழகு இருந்தும் நடிக்க வாய்பபின்றி தன் கேரியரை இழந்திருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், நான் நிறைய படங்களை மிஸ் செய்து விட்டேன். அந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. அந்த படத்தின் கதை தெரிந்து அந்த கதையை நான் மறுக்கவில்லை. சூழ்நிலைகள் காரணமாகவே அந்த கதைகளில், படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் நடிக்காமல் மிஸ் செய்த படங்கள் என்று அவர் குறிப்பிடுவது லிங்குசாமி டைரக்ஷனில் மாதவன் நடித்த ரன், மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, சித்தார்த், மாதவன் நடித்த ஆய்த எழுத்து, ஜீவா நடித்த டிஸ்யூம், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தெலுங்கில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது என, சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். நான் கடவுள் படத்திலும் அஜீத்குமார் நடிக்க மறுத்த பிறகு, ஸ்ரீகாந்துக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதை எல்லாமே கோட்டை விட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.





