தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக ரசிகர்களின் மனங்களை வென்றவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இதுவரை 7 முறை மத்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றவர். ஜெய்ஹோ பாட்டுக்கு ஆஸ்கர் விருதும் பெற்று இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்.
நேற்று லண்டனில் இருந்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் சென்னை திரும்பிய நிலையில், நேற்றிரவு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு 2 மணி வரை தூக்கம் வராமல் தவித்த அவருக்கு திடீர் நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தீவிரமாக மருத்துவ பரிசோதனைகள் செய்த டாக்டர் குழு, அவருக்கு நீரிழப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வழக்கமான சில மருத்துவ பரிசோதனைகளை செய்த நிலையில், அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் எந்த உடல் நல பிரச்னைகளும் இல்லை என்று அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஏஆர் ரகுமானின் உடல் குறித்து விசாரித்துள்ளார். மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் உடல் நலம் குறித்து அக்கறையாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு, அவரை பிரிவதாக தனது வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். உடல் நலம் பிரச்னை காரணமாக ஏஆர் ரகுமானுடன் இனி சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் இது தனது தனிப்பட்ட முடிவு என்றும் தனது கணவரை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இப்போது ஏஆர் ரகுமான் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில், பதிவு ஒன்றை செய்துள்ள சாயிரா பானு அந்த பதிவில், நானும் என் கணவர் ஏஆர் ரகுமானும் இன்னும் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இன்னும் கணவன் மனைவி பந்தத்தில்தான் இருக்கிறோம். அதனால் தயவு செய்து யாரும் என்னை முன்னாள் மனைவி என்று அழைக்கவோ, சொல்லவோ வேண்டாம் என்று அந்த பதிவில் சாயிரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





