தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய மதராஸி படம் அடுத்து வெளியாக உள்ளது. மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது.
ஏஆர் முருகதாஸ் தமிழில் இயக்கி வெளியான கஜினி ரமணா ஏழாம் அறிவு கத்தி சர்கார் துப்பாக்கி உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழை போல இந்தியிலும் பல படங்களை ஏஆர் முருகதாஸ் இயக்கி உள்ளார்.
சிக்கந்தா் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, மும்பையில் ஒரு சூட்டிங்கில் இருந்த நடிகர் சல்மான் கானை நான் முதல் முறையாக சந்தித்து பேசினேன். அப்போது உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்புகிறேன் என்று கூறினேன். அவரும் நானும் உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்புகிறேன் என்று கூறினார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் சென்ற நிலையில் திடீரென ஒருமுறை என்னை அவர் அழைத்தார், கொரியா படம் ஒன்றை ரீமேக் செய்யும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் படம் பண்ணுவதாக இருந்தால் அது என்னுடைய சொந்த கதையாக தான் இருக்க வேண்டும் என்று நான் கூறி அவர் சொன்னதை ஏற்க மறுத்துவிட்டேன்.
அதன் பின்னர் கொரோனா தொற்று காலகட்டத்தில் தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா என்னை சந்தித்தார். நாங்கள் இருவரும் கதை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசினோம். கதையை சல்மான் கான் அரை மணி நேரம் கேட்டார். பிறகு ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டார்.
அப்போது அவர் என்னிடம், நான் எப்படி வேலை செய்வேன் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியாது என்றேன். உடனே அவர், நான் பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2 மணி வரை வேலை செய்வேன். உங்களுக்கு அது ஓகேவா என்று கேட்டார். இப்படி கேட்டதன் மூலம் எனது கதை அவருக்கு பிடித்து விட்டது என்று நினைத்தேன். அப்படித்தான் சிக்கந்தர் படம் உருவானது என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





