தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பிற மாநில நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் என்பது இல்லை. இங்கிருக்கும் விஜய் சூர்யாவுக்கு கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அங்கு பேனர் வைத்து கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு இங்கு பிற மாநில நடிகர்களுக்கு கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
இருப்பினும் இதிலிருந்து சற்று தனித்துவமாக விளங்குகிறார் ஃபகத் பாசில். தமிழகத்தில் அவருக்கென பேனர் கட்டி கட் அவுட் வைத்து கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தாலும், பகத் பாஸில் குறித்த பேச்சு எப்போதும் இணையத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் நடிப்புக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது இணையத்தை பார்க்கும் போதே தெரிந்து விடும்.
வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த அவர், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இங்கு உள்ளவர்களுக்கு பரிச்சயமானார். குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப் போனால் படத்தின் முதல் பாதி அவரை வைத்தே நகரும். இதேபோல மாமன்னன் திரைப்படத்திலும் ரத்னவேல் கதாபாத்திரத்தில் கலக்கினார் பகத் பாசில்.
படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் என்றாலும், அதை மிகவும் யதார்த்தமாக நடித்து கலக்கியதால் பகத் பாசிலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படியான சூழலில் தற்போது மாரீசன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பாசில். அவருடன் வடிவேலுவும் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகத் பாசில் பேசி இருக்கிறார்.
அதில், முதலில் மாரீசன் திரைப்படத்தின் கதையை மலையாளத்தில்தான் கேட்டேன். எப்போது வடிவேலு சார் இதில் வருகிறார் என்பது தெரிந்தது அப்போதே தமிழில் இதை எடுக்க வேண்டும் என்றேன். நாங்கள் ஒரு காமெடி படத்தைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் வடிவேலு சாருக்கு மாரீசன் பிடித்துப் போனது. ஒரு வித்தியாசமான உலகை நீங்கள் இதில் பார்ப்பீர்கள்.
நான் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது கட் அடித்து விட்டு முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். அது பாட்ஷா திரைப்படம். அதில் ரஜினி சாரின் நடிப்பை பார்த்து பிரமித்து விட்டேன். ஓராண்டாக நான் செல்போன் உபயோகிப்பது இல்லை. ஈமெயில் வழியாகவே பிறரை தொடர்பு கொள்கிறேன். என்னுடைய கேரியரை அப்டேட் செய்வதற்காக மட்டுமே ஆரம்பத்தில் நான் சமூக வலைதளத்தில் இருந்தேன். நான் நல்ல திரைப்படங்களை கொடுப்பதால் இப்போது இருக்கும் தலைமுறையினரிடம் இருந்து நான் விலகி இருப்பதாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.





