தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்வி உதயகுமார். ரஜினிகாந்த் மீனா நடிப்பில் எஜமான், விஜயகாந்த் சுகன்யா நடித்த சின்னக்கவுண்டர் கமல்ஹாசன் குஷ்பு நடித்த சிங்காரவேலன் மற்றும் ராஜகுமாரன் கிழக்குவாசல் பொன்னுமணி நந்தவனத்தேரு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
சமீபத்தில் இஎம்ஐ மாத தவணை என்ற படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர்கள் கே பாக்யராஜ் மற்றும் ஆர்வி உதயகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சதாசிவம் சின்னராஜ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சபரி புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இந்த பட விழாவில் இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, சமீப காலமாக பலரும் பெரிய பட்ஜெட் படங்களாக எடுப்பதால் சின்ன பட்ஜெட் படங்கள் தானாகவே பெயர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றன. பெரிய பட்ஜெட் படங்களில் பெரிய நடிகர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் சின்ன பட்ஜெட் படங்களில் ஜெயிக்க வேண்டும் என்கிற உணர்வோடு வெறியோடு எடுப்பதால் சின்ன படங்கள் ஜெயிக்கின்றன.
அதனால் சிறிய படங்களை தொடர்ந்து ஜெயிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் சிறிய படங்களில் இருந்து தான் பெரிய இயக்குனர்கள் உருவாகிறார்கள். அப்படி சிறிய படம் வெற்றி பெற்றதும் பெரிய நடிகர்கள் அவர்களை அழைத்து வாய்ப்பு கொடுத்து அந்த இயக்குனரையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றனர்.
உதயகுமார் படம் பாரதிராஜா படம் பாக்யராஜ் படம் என்று பெயர் வாங்கும் அளவிற்கு படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஜெயிக்கும். இன்றைய தமிழ் சினிமாவில் குவாலிட்டி நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கண்டென்ட் தான் சரியில்லை.
இதை நான் சொல்வதற்கு காரணம் தெளிவான திரைக்கதை தெளிவான காட்சியமைப்பு இருக்கிற திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இப்போது தெலுங்கு சினிமா நம்பர் ஒன் இடத்திலும் மலையாள சினிமா இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழ் சினிமா 6வது இடத்திற்கு சென்று விட்டது. தமிழ் சினிமாவின் இந்த பின்னடைவுக்கு காரணம் சரியான தயாரிப்பாளர்கள் இல்லாததுதான் என்று இயக்குனர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.





