தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கமல்ஹாசன் திடீரென அரசியல் களத்தில் குதித்தார். மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கி தலைவரானார். ஆனால் நடிகராக ஜெயித்த கமல் அரசியலில் தலைவராக ஜெயிக்க முடியாமல் இப்போது திமுக விசுவாசியாக மாறியிருக்கிறார்.
அதே நேரத்தில் கடந்தாண்டில் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கியவர் நடிகர் விஜய். சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய் திடீரென அரசியல் களத்தில் குதித்தது தமிழக மக்களுக்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் பேசவே தயங்கும் விஜய், அரசியல் மேடைகளில் எப்படி பேசப் போகிறார் என்றும் பலர் விமர்சித்தனர்.
ஆனால் கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் 48 நிமிடங்கள் விஜய் நான் ஸ்டாப்பாக பேசி தமிழக மக்களை வியக்க வைத்தார். இது நடிகர் விஜய்தானா என சினிமா சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் அசந்து போய் விட்டனர்.
எனினும் விஜய் அரசியலுக்கு வந்ததை பலரும் பலவிதமாக விமர்சிக்கவே செய்கின்றனர். நாம் தமிழர் கட்சி சீமான் வெளிப்படையாகவே விஜயை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கே பாக்யராஜூம் திமுகவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். நடிகர் கருணாஸ் விஜயை விமர்சித்திருந்தார். அதே போல் நடிகர் போஸ் வெங்கட்டும் அவ்வப்போது விஜய் குறித்து விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது, ஜோசப் விஜய் அவர்களே உங்களுக்கு வரக்கூடிய கூட்டம் என்பது வேறு. இங்கு இருக்கிறவர்கள் அத்தனை பேரும் விஜய் ரசிகர்கள்தான், நான் உட்பட. அது சினிமா. உங்களை நாங்கள் ரசிப்போம், கைதட்டுவோம். தியேட்டருக்கு முதல் ஆளாக வருவோம், டிக்கெட்டுக்காக சண்டை கூட போடுவோம்.
உங்களை பாராட்டக்கூடாதா என்ன, நான் பாராட்டுகிறேன். நீங்கள் மிகச் சிறந்த நடிகர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடையில் இருந்தே உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் மிகப்பெரிய நடிகர். ஆனால் ஜீரோ பொலிடீசியன் என்று நடிகர் போஸ் வெங்கட் பேசியிருக்கிறார். இவர் மெட்டி ஒலி என்ற டிவி சீரியலில் போஸ் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர். தேவராட்டம் சிவாஜி தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.





