சூர்யாவுக்கு சமீபகாலமாக வெளிவந்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும், அது திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த வருத்தம் இன்றளவும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதுபோக திரையரங்குகளில் கொண்டாடும் அளவுக்கு அவரது படங்கள் எதுவும் அண்மை காலமாக ரிலீஸ் செய்யப்படவே இல்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கங்குவா திரைப்படமும் மண்ணை கவ்வியது.
இத்தனைக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. சூட்டிங்கிற்காக ஓராண்டை செலவழித்தார் இயக்குனர் சிறுத்தை சிவா. ஆனால் அது எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால் சற்று வருத்தத்தில் இருக்கும் சூர்யா, இனி அடுத்தடுத்த திரைப்படங்களை விரைவாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
அப்படி அவர் முதலில் நடித்த திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக வருகிறார் பூஜா ஹெக்டே. ஜெயராம் கருணாகரன் பிரகாஷ்ராஜ் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான இதன் டீசர் மிகப்பெரும் அளவில் வரவேற்பு பெற்றது.
அதேபோல் கனிமா பாடலும் பலரால் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் பூஜாவின் நடன அசைவுகள் ரசிகர்களை கவர்ந்தன. இந்த நிலையில் படம் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை முடித்ததும் சூர்யா எனக்கு கால் செய்தார். ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்க நான் ரெட்ரோ படத்தின் கதையை கூறினேன்.
அவருக்கு பிடித்து விட்டதால் உடனடியாக சூட்டிங் தொடங்கப்பட்டது. ரெட்ரோ காலத்தை குறிக்கிறது. பின்னணியில் செல்வதற்கு ஒரு வித்தியாசமான பொருள் இதில் இருக்கிறது. பாரிவேல் கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. படத்தில் தூத்துக்குடி வட்டார மொழியை மிக அழகாக பேசியிருக்கிறார். இது கேங்ஸ்டர் படம் கிடையாது. ஒரு அழகான காதல் கதை இது என்று தெரிவித்துள்ளார்.





