சிவா நடிப்பில் வெளியான தமிழ் படத்தை தயாரித்ததன் மூலம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் கோலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானது. தொடர்ந்து, வாயை மூடி பேசவும், இறுதிச்சுற்று, மண்டேலா, விக்ரம் வேதா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தயாரிப்பு மட்டுமல்லாமல் படங்களை விநியோகிப்பதிலும் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சசிகாந்த், முதல் முறையாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். டெஸ்ட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில், சித்தார்த், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஷி கண்ணா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றி இந்தப் படம் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு, பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் எஸ்வி சேகர், டெஸ்ட் படத்தில் தான் இடம் பெற்றதாகவும், ஆனால் சித்தார்த்தின் அழுத்தத்தால் அந்தப் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசியிருக்கும் அவர், “டெஸ்ட் படத்தில் சித்தார்த்தின் தந்தையாக நடிப்பதற்காக சசிகாந்த் என்னை அணுகினார். நானும் அதற்கு ஏற்றவாறு கால்ஷீட்களை கொடுத்தேன். ஆனால் திடீரென ஒரு நாள் என்னை சந்தித்த சசிகாந்த், என்னுடன் நடிப்பதில் சித்தார்த்துக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார். அவர் பிரதமர் மோடியின் எதிர்பாளராம். நான் மோடியின் ஆதரவாளராம். இதனால், சித்தார்த் என்னுடன் நடித்தால் அவரை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து விடுவார்களாம்.
இந்த ஒரு காரணத்திற்காக என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். எனக்கென ஒரு பின்னணி இருக்கிறது. அதாவது நான் ஒரு திரைப்படத்தை நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் அதிலிருந்து வெளியேறி விட்டால், ஒன்று அந்த திரைப்படம் ஓடாது அல்லது ரிலீஸ் ஆகாது. நான் மோடி ஆதரவாளர் என்றால், மாதவனும் மோடியை பின்தொடர்பவர் தான். அப்படி என்றால் அவருடன் நடிக்க மாட்டேன் என்று சித்தார்த் கூறி இருக்கலாமே. ஏன் இவ்வளவு கோழையாக இருக்கிறார். உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் கூட நான் நடிப்பதாக இருந்தது.
நான் அதற்கு சற்று யோசித்தபோது, உதயநிதியே ஒப்புக்கொண்டு தான் என்னை அணுகியதாக கூறினார்கள். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர், சொன்ன நேரத்திற்கு வராமல் இரண்டு நாட்கள் காலதாமதம் செய்ததால் அந்த படத்தில் இருந்து வெளியேறினேன். சித்தார்த் நடந்து கொண்டது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று எஸ்வி சேகர் பேசியுள்ளார்.





