நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் 8ம் முதல் துவங்கி நடந்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்த படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.
ஜெயிலர் படத்தின் அபார வெற்றியால் மகிழ்ச்சியடைந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கு விலை உயர்ந்த கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான சொகுசு கார்களை பரிசளித்தார்.
மேலும் இதுவரை ரஜினிகாந்த் அவர் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்குமாறு கலாநிதிமாறன் ரஜினியிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு ரஜினியும் சம்மதித்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து இப்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் நடந்து வருகிறது. ரஜினி அங்கு படப்பிடிப்பில் இருந்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். ஏற்கனவே படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். அவர் ஜெயிலர் 2 படத்திலும் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கடந்த 10ம் தேதி முதல் கலந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
மேலும் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் அவர் நடித்து 26 ஆண்டுகள் ஆன நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் 26 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிப்பதும் உறுதியாகி உள்ளது.





