ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தற்போது எதிர்பார்த்து காத்திருப்பது வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் காம்போவில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை பற்றி தான். அசுரன் திரைப்படத்தை முடித்த கையோடு இதனை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. சி சு செல்லப்பா வாடிவாசல் என்னும் குறுநாவலை எழுதியிருக்கிறார்.
இதனை மையமாக வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ் தாணுவிடம் கதையைக் கூற அவர் தயாரிக்க முன்வந்தார். தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே செட் போட்டு ஜல்லிக்கட்டுக்கான பயிற்சி நடைபெற்றது. அதில் சூர்யாவும் கலந்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ வெளியானது. அது மட்டுமல்ல படத்தில் இயக்குனர் அமீர் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்த திரைப்படங்களில் சூர்யா கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த இடைவேளையில் ஒரு சிறிய படத்தை எடுத்து வருவதாக கூறி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் விடுதலைப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகங்களுக்காகவே செலவழித்தார் வெற்றிமாறன். சூர்யாவும் இந்த பக்கம் கங்குவா படத்தில் நடிக்க சென்று விட்டார். இதனால் வாடிவாசல் திரைப்படத்தின் பேச்சு அப்படியே நின்று போனது.
இந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படத்திற்கான பாடல்களை ஜிவி பிரகாஷ் முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் பிஸியாக இருக்க, அடுத்ததாக வெற்றிமாறனுடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. இந்தத் திரைப்படம் உலகத் தமிழர்களுக்கு ஒரு உன்னதமாக இருக்கும். கமர்சியலின் உச்சமாக இருக்கும். கடந்த வாரம் வெற்றிமாறனிடம் பேசும் போது, படத்தின் introduction காட்சி 25 நிமிடங்கள் இருக்கும் என்று கூறி விவரித்தார். இதைக் கேட்டதும் தம்பி இதுவே போதும். இதனை எடுத்தாலே 100 முறை வந்து ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று வெற்றி மாறனிடம் கூறியதாக தாணு தெரிவித்தார்.





