நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது படத்தில் இயக்கி நடித்து வருகிறார். ஜூலை மாதத்தில் தொடங்கிய இதன் சூட்டிங் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதனிடையே, வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில், கன்னட பிரபலம் சிவராஜ்குமார், சந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ராக்கி, சாணி காயிதம் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இதனை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படம் குறித்து அருண் மாதேஸ்வரன், தனியார் சேனலுக்கு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு முன்பு ஏற்பட்ட அடிமைத்தனத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் இருந்த அடிமைத்தனத்தையும் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறோம்.
கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு கதை. நாங்கள் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தான் எடுத்திருக்கிறோம். அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய கதைகளும் இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் இதனை விட பெரிய பட்ஜெட் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், தற்போது பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஏலியன் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படமும் பொங்கலன்று தான் வெளியாகிறது. ஒரே நேரத்தில் ரஜினிகாந்த் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களை வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் பொங்கலன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.





