இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் கடந்த 48 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்து வருகிறார். விரைவில் தமிழக அரசு அவரது அரை நூற்றாண்டு கால இசை சாதனைகளை பாராட்டி விழா நடத்த உள்ளது. இளையராஜா பிறந்த நாளில் இந்த விழா நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில்தான் இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் சிம்பொனி அரங்கேற்றம் செய்து சாதனை படைத்திருக்கிறார். அதன்பிறகுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் பழைய பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்த பாடல்கள்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக புகழ் பெற்றவை என்பதால் ரஜினி கமல் விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து பாடல்களை எடுத்து பயன்படுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக கிராமிய கதைகளில் பின்னணியில் உருவான படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால், அத்தகைய பாடல்களையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா தொடர்ந்து கோர்ட் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
என்னுடைய இசையில் உருவான பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என இளையராஜா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் வெளியான பல ஹிட் பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக்குருவி போன்ற பாடல்களை ஒலிக்க செய்திருக்கின்றனர்.
தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல், எனது இசையில் உருவான இந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





