இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தரும் இயக்குனராக இருந்து வருகிறார். அரண்மனை 4 மதகஜ ராஜா படங்களை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்த கேங்கர்ஸ் என்ற படம் வருகிற 24ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நாயகியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இயக்குனர் சுந்தர் சியுடன் நடிகர் வடிவேலு இணைந்து நடித்திருக்கிறார். சுந்தர் சி இயக்கிய படங்களிலும், அவர் நடித்த படங்களிலும் வடிவேலு காமெடி காம்போ பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது மீண்டும் அந்த காம்போ கேங்கர்ஸ் படத்தில் இணைந்திருக்கிறது.
இன்றைய ஆண்ட்ராய்டு உலகத்தில் சோஷியல் மீடியா என்பது யாராலும் தவிர்க்க முடியாதது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சோஷியல் மீடியாவில் இருந்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் சுந்தர் சிக்கு சோஷியல் மீடியாவில் எந்த பதிவும் செய்யத் தெரியாது. லேப்டாப் ஒன்றை கூட ஓபன் செய்யத் தெரியாது என்று சொல்லப்படுகிறது. அவர் இயக்கும் படங்கள் பற்றிய அப்டேட்டுகளை கூட அவரது மனைவி குஷ்புதான் தனது வலைதள பக்கங்களில்
வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி பங்கேற்றார். அப்போது இதுகுறித்த கேள்விக்கு இயக்குனர் சுந்தர் சி பதிலளித்து கூறியதாவது, எனக்கு என்னான்னு தெரியல. அதுல பெருசா எனக்கு இன்ஸ்டரஸ்ட் இல்லே. ஆனா அது பெரிய தப்புன்னு மட்டும் தெரியுது.
ஏன்னா இந்த காலத்துல வந்து சோஷியல் மீடியா ரொம்ப முக்கியமானதாக உள்ளது. யாராலும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தகவல் தொடர்பில் மிகப்பெரிய சாதனம். எல்லா இம்பர்மேஷனும் உடனே தெரிஞ்சுக்கலாம். நம்ம ஆடியன்ஸ்க்கு ரசிகர்களுக்கு எல்லா விஷயத்தையும் உடனே ஷேர் பண்ணலாம். அவங்க கூட கம்யூனிகேட் பண்ணலாம் என்று எல்லாம் தெரியுது.
ஆனாலும் இது சோம்பேறித்தனமா, கையாலாகத்தனமா என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலே. இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு எதுவுமே தெரியாது. இப்போ உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் எனக்கு ஒரு மெயில் அனுப்பக் கூடத் தெரியாது என்று அந்த நேர்காணலில் சிரித்தபடி இயக்குனர் சுந்தர் சி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





