கர்ணன் திரைப்படத்தை முடித்த பிறகு மாரி செல்வராஜ் அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் இணைய இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. படத்தை நீலம் ப்ரொடக்சன் சார்பில் பா ரஞ்சித் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடைவேளையில், உதயநிதி தனது கடைசி திரைப்படத்தை இயக்கி தருமாறு மாரி செல்வராஜிடம் கேட்டுக் கொண்டார்.
இப்படியாகத்தான் உருவானது மாமன்னன் திரைப்படம். உதயநிதி வடிவேலு பகத் பாஸில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து கிடைத்த சிறிய இடைவேளையில், வாழை திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து துருவுடன் இணைந்து அவர் தனது திரைப்படத்தை எடுத்தார். இதற்கு, பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே டேக் லைனாக காளமாடன் என்று வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடத்தப்பட்டது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இதனால் படத்தில் கபடி விளையாட்டு பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்காகவே வேறு எந்த திரைப்படங்களிலும் கமிட் ஆகாமல் இரண்டு ஆண்டுகளாக கபடி பயிற்சிகளிலேயே தன்னை முழுக்க முழுக்க ஈடுபடுத்தி இருந்தார் துருவ். படத்தில் கபடி விளையாட்டிற்கான காட்சிகளை மட்டும் சென்னையில் செட் போட்டு எடுத்தார்கள். படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
ரஜிஷா விஜயன், பசுபதி, லால், கலையரசன், அழகம்பெருமாள் உள்ளிட்டோரும் பைசன் திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதியை மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். தீப்பிடித்து எரியும் வனத்திற்குள் இருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பலர் லைக்குகளை அளித்தாலும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்று கூறி வருகின்றனர்.





