மண்டேலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. இதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றது.

ஒரே கிராமத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு சமுதாய மக்களுக்குள், ஒரு பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்க, உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் களைகட்டுகிறது. ஆனால், இரண்டு தரப்பிலிருந்தும் ஒருவர்தான் வெற்றியை தீர்மானிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட, கிராமத்திலேயே இளிச்சவாயன் என்று கூறப்படும் யோகி பாபுவிடம் ஒற்றை ஓட்டுக்காக நிற்கின்றனர் இரு தரப்பு மக்கள்.
இந்தக் கதையையே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மண்டேலா திரைப்படம், விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் யோகி பாபுவின் யதார்த்தமான நடிப்பு பலரையும் கவனிக்கச் செய்தது. இந்தப் படத்தின் மூலம் மடோன் அஸ்வின், சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை பிரிவில் வசனத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.

மடோன் அஸ்வின் உழைப்பை பார்த்து, அவருக்கு தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் சிவகார்த்திகேயன். இதைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படம் உருவாக, அது கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியானது. அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்தனர்.
ஒரு கோழையான இளைஞன் வீரனாக எப்படி மாறுகின்றான் என்கிற ஒன்லைனை கையில் எடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின், அதனை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து வெற்றி கண்டார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சற்று சோர்வை ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே வந்து போன யோகி பாபுவின் பேட்ச் ஒர்க் காமெடி, மாவீரன் படத்திற்கே பேட்ச் ஒர்க் போட்டது.
சிவகார்த்திகேயனின் அசத்தலான நடிப்பு, மிஷ்கினின் மிரட்டலான வில்லத்தனம் மற்றும் யோகி பாபுவின் சூப்பர் டூப்பர் காமெடியால் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலையும் குவித்தது. இதுவரை சுமார் 80 கோடி ரூபாய் அளவில் மாவீரன் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் வரும் 11ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





