தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற மாநில நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது என்பது மிகக் குறைவு தான். அதேசமயம் இங்கிருக்கும் நடிகர்களுக்கு பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக நாம் விஜயை கூறலாம். கேரள மாநிலத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இங்கு விஜயின் திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி எப்படி கொண்டாடப்படுகிறதோ அதேபோல் கேரளாவிலும் கொண்டாடப்படுகிறது.
இதேபோல் சூர்யாவுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரசிகர்கள் அதிக அளவு உள்ளனர். அவரது தம்பி கார்த்தியும் இந்த வரிசையில் இருக்கிறார். அதேசமயம் தமிழ்நாட்டில் பார்க்கப் போனால் பகத் பாசிலுக்கு ஓரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம். திரையரங்குகளில் திரளும் அளவுக்கு ஃபேன்ஸ் இல்லை என்றாலும், இணையத்தில் அவரைப் பற்றி பேச ஒரு கூட்டம் உள்ளது.
இதே போல் மோகன்லாலும் தமிழ் சினிமாவுக்கு நன்கு பரீட்சையமானவர் என்றே கூறலாம். இப்போது அல்ல 90களிலேயே அவர் சிறைச்சாலை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதுபோல மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தில் நடித்து கலக்கியிருந்தார் மோகன்லால்.
பிறகு சிறிது காலம் தமிழ் சினிமாவுக்கு வராமல் இருந்த அவர், கமல் நடித்திருந்த உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வந்து கவனத்தை ஈர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர், விஜய்யுடன் இணைந்து நடித்த ஜில்லா திரைப்படம் இங்கு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த ஆண்டு மோகன்லாலுக்கு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம். சில மாதங்களுக்கு முன்பு பிரித்வி ராஜ் இயக்கத்தில் அவர் நடித்த எம்புரான் திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலிலும் கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக தொடரும் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. கேரளாவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை அந்த திரைப்படம் அடித்தது.
தொடரும் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கிறார் மோகன்லால். இதற்காக தென்காசி அருகே மலைப்பகுதியில் இருக்கும் திருமலை குமாரர் கோயிலுக்கு அவர் சென்று இருக்கிறார். அங்கு வேலை சாத்தி தனது நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார் மோகன்லால். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





