நடிகர் கமல்ஹாசன் சிலம்பரசன் இணைந்து நடித்த படம் தக்லைஃப். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு படமான தக்லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் டைரக்ட் செய்திருக்கிறார். மணிரத்னத்தின் சின்ன மாமனார்தான் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். கமலின் அண்ணன் சாருஹாசன் மகளை தான் மணிரத்னம் திருமணம் செய்திருக்கிறார்.
இப்படி நெருங்கிய உறவினர்களாக கமல் மணிரத்னம் இருந்தாலும் நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகளாக இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை. அதனால் தக்லைஃப் படம் மூலம் மீண்டும் இருவரும் இணைவதால் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. விண்டேஜ் நாயகன் போல இது வேற லெவலில் இருக்கும் என்றும் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால் தக்லைஃப் படம் வெளியான பிறகு நடிகர்கள் கமல் சிம்பு என்ற இருவரை தவிர இந்த படத்தில் எதுவும் ரசிகர்களை கவரும் விதமாக இல்லை. குறிப்பாக பாடல்காட்சிகள் பின்னணி இசை என ஏஆர் ரகுமானும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் என்பதால் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.
மற்றபடி கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என எந்த விஷயத்திலும் தக்லைஃப் படத்தில் இயக்குனர் மணிரத்னம் அடையாளம் இல்லை. படம் பார்த்த ரசிகர்களின் பலத்த கேள்வி இது மணிரத்னம் படம்தானா என்பதுதான். இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவே இல்லையே என்றுதான் ரசிகர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக திரிஷா கேரக்டர் எதற்கு படத்தில் என்றே கேள்வி பலருக்கும் எழுகிறது.
இந்த சூழலில் தக்லைஃப் படம் குறித்த வேறு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முழுமையாக உருவான தக்லைஃப் படத்தை நடிகர் கமல்ஹாசன், தக்லைஃப் படம் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன்னதாக தான் தனது வீட்டில் பார்த்திருக்கிறார். அப்போது மணிரத்னமும் அவருடன் இருந்திருக்கிறார். ஆனால் படத்தில் எந்த மாற்றமோ திருத்தமோ செய்ய தயாரிப்பாளர் ஹீரோவா கமலுக்கு அவகாசமே இல்லை.
அதே நாளில்தான் வேறு ஒரு இடத்தில் தக்லைஃப் படத்தை முழுமையாக சிம்புவும் பார்த்திருக்கிறார். அதன்பிறகுதான் சிம்பு துபாய் கிளம்பிச் சென்றிருக்கிறார். நிச்சயமாக படம் மீதான மைனஸ் பாயிண்டுகள் அவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் கடைசி ஒரு நாள் முன்னதாக தக்லைஃப் படத்தை கமல், சிம்புவுக்கு போட்டுக்காட்டி அவர்களது கைகளை கட்டிப் போட்டு வெச்சு செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் என்று கமல் சிம்பு ரசிகர்கள் புலம்புகின்றனர்.





