தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் சின்மயி. டப்பில் கலைஞராகவும் உள்ளார். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடவும் டப்பிங் பேசவும் பாடகி சின்மயி தடை விதிக்கப்பட்ட நிலையில், தெலுங்கில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். தெலுங்கில் பல பாடல்களை பாடிய அவர், தெலுங்கில் டப்பில் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் உள்ளார்.
சமீபத்தில் தக்லைஃப் படம் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி முத்தமழை பாடலை பாடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் புகார் எழுப்பிய நிலையில், அவர் மீது ரெட்கார்டு போடப்பட்டது. இப்போது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிய நிலையில், அவருக்கு விதித்த தடையை நீக்கி தமிழில் பாடவும் டப்பிங் பேசவும் தமிழ் சினிமா துறை அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி சின்மயிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் பங்கேற்றார். அப்போது கவிஞர் வைரமுத்துவை கடுமையாக அவர் விமர்சித்தார். நீ என் நண்பன் என்பதற்காக நீ செய்த தவறை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நீ நல்ல கவிஞன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ ஒரு நல்ல மனிதன் கிடையாது. சின்மயிக்கு நான் ஆதரவாக நிற்பேன் என்றும் பேசியிருந்தார்.
கங்கை அமரன் மிக மோசமாக கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து பேசியது இணையத்தில் வைரலான நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றில் பேசியதாவது, சின்மயி இந்த பிரச்னையை தீர்வுக்கு கொண்டு வராமல், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வைரமுத்து மீது சாணியை வாரி அடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
சின்மயி விஷயத்தில் சின்மயி என்ன வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். ஏனென்றால் அவர் பாதிக்கப்பட்டவர். ஆனால் யார் யாரையோ அழைத்து வந்து பேச வைப்பது மிகவும் தவறான ஒரு மோசமான செயல். சின்மயி தினந்தோறும் கூட வைரமுத்துவை திட்டலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தன்னுடன் யார் யாரையோ உட்கார வைத்து பேசுகிறார். அவர்கள் எல்லாம் யோக்கியமானவர்களா என்று ஒரு கேள்வி எழுகிறது.
தேவை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் ஒரு ஆளை அழைத்து வந்து அவரை வைத்து திட்ட வைப்பது சரியில்லை. அந்த நபருடன் பழகிய ஆட்கள் எத்தனை பேர் யோக்கியவான்கள் என்ற கேள்வியும் உள்ளது. உங்களில் யார் யோக்கியவான்; அவனே கல்லெறியட்டும் என்று பைபிளில் கூறியது போல, உங்களில் யார் யோக்கியவான்? என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த வீடியோவில் கங்கை அமரன் பேசியதை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். பத்திரிகையாளர் அந்தணன் பேசிய இந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி உள்ளது.





