தமிழ் சினிமாவில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆனாலும் அந்த படத்தின் கதை என்னுடையது என்று யாரேனும் புகார் எழுப்புவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தெலுங்கில் மலையாளத்தில் இந்தியில் ஹிட் ஆன படங்களின் கதையை சத்தமின்றி உருவி தமிழ் கதையாக மாற்றி பட்டி டிங்கரிங் செய்து இயக்கி வெற்றி பெறும் கலையும் தமிழ் பட இயக்குனர்கள் சிலருக்கு கைவந்த கலை. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களையே காப்பியடிக்கும் வல்லமையிலும் தமிழ் சினிமா இயக்குனர்கள் சிலர் கைவரிசை காட்டி அசத்துகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடரும் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. நடிகர் மோகன்லால் ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் தொடரும். இந்த படம் 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
இயக்குனர் தருண் மூர்த்தி இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் வெளியாகி ஒன்றரை மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது தொடரும் படத்தின் கதை என்னுடையது. என்னுடைய ஸ்கிரிப்ட்டில் இருந்து பெரும் பகுதியில் படம் உருவாக்கப்பட்டது என்ற ஒரு புகாரை பிரபல மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சு வாரியார் பற்றிய சில கருத்துக்களை சணல்குமார் சசிதரன் கூறியதால் அவர் மீது நடிகை மஞ்சு வாரியார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதற்காக சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விருதுகளை குறி வைத்து படம் இயக்கும் இயக்குனரான இவர் கடைசியாக மஞ்சுவாரியாரை வைத்து இயக்கிய படம் காயட்டம். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தொடரும் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு தகவலை சணல்குமார் சசிதரன் கூறியிருக்கிறார். இதுகுறித்து சணல்குமார் சசிதரன் கூறியதாவது, கடந்த 2020ம் ஆண்டில் தீயாட்டம் என்கிற ஸ்கிரிப்ட்டை நான் தயார் செய்தேன். அந்த சமயத்தில் மஞ்சுவாரியார் டொவினோ தாமஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களிடமும் இந்த கதையை கூறியிருக்கிறேன்.
என்னுடைய கதையில் கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். வேண்டுமென்றே அவன் மீது பழி சுமத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்படுகிறான் என்பது போன்று கதை உருவாக்கப்பட்டு இருக்கும். தொடரும் படத்தில் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் கிட்டத்தட்ட என்னுடைய தீயாட்டம் கதையிலிருந்து தான் அது எடுத்து கையாளப்பட்டுள்ளது. விரைவில் என்னுடைய தீயாட்டம் ஸ்கிரிப்ட்டை நான் சோசியல் மீடியாவில் வெளியிடுகிறேன். நீங்கள் படித்துப் பார்த்துவிட்டு நான் சொல்வது உண்மையா இல்லையா என்று கூறுங்கள். உங்கள் பார்வைக்கு அதை விட்டு விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். இது தற்போது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





