அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மட்டுமே விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இதில் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் அஜித்திற்கான மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல், திரைக்கதையிலும் விறுவிறுப்பு குறைவாக இருந்ததால் விடாமுயற்சி வரவேற்பு பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தார் அஜித்குமார். இதுவும் கலவையான விமர்சனத்தைதான் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது குட் பேட் அக்லி. இதற்குக் காரணம் அஜித்திற்கான மாஸ் காட்சிகள் படத்தில் அதிகம் வைக்கப்பட்டது தான். அதுமட்டுமல்லாமல் கமர்சியல் படங்களுக்கே உண்டான சீன்களை சரியாக கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆங்காங்கே ரெட்ரோ பாடல்களையும் சொருகி இருந்தார். இப்படி ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக இந்த திரைப்படம் அமைந்ததால், 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. இது பற்றி அண்மையில் பேசி இருந்த அஜித்குமார், தனது அடுத்த திரைப்பட பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்றும், தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு திரைப்படத்தில்தான் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது அறுபத்தி நான்காவது திரைப்படம் யாருடன் இருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வந்த சூழலில் தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
குட் பேட் அக்லியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன்தான் மீண்டும் அஜித்தை வைத்து இயக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தை யார் தயாரிக்கப் போவது என்ற பேச்சு மட்டும் தொடர்ந்து எழுந்து வந்த சூழலில், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெளிநாடுகளில் கார்பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார்.
அப்போது பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் அவர், f1 அல்லது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. பொதுவாகவே நான் எனது திரைப்படங்களிலேயே ஸ்டண்ட் செய்வேன். அப்படி இருக்கும்போது, அந்தப் படக்குழுவினர் என்னை அழைத்தால் நான் ஏன் மறுக்கப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.





