தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரபாஸ். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி பாகுலி 2 ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்த பிறகு அந்த படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றதால், பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறிவிட்டார். இப்போது அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய நட்சத்திர நடிகராக இருக்கிறார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் ஆதி புருஷ். டி சீரஸ் ரெட்ரோபைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தன. நடிகர் பிரபாஸூடன் கிருத்தி சனோன் சயிப் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த இராமாயணம் படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த ஆதி புருஷ் படத்தை ஆந்திராவை சேர்ந்த வினியோகஸ்தர் ஸ்ரீனிவாஸ் குமார் நாயுடு (எஸ்கேஎன்) என்பவர் ரூ. 186 கோடிக்கு வாங்கி வெளியிட்டார். ஆனால் அவருக்கு இந்த படம் ரூ. 46 கோடி மட்டுமே வசூலாகி இருக்கிறது. இதில் 140 கோடி ரூபாய்க்கு மேல் அந்த வினிேயோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நடிகர் பிரபாஸ், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் ஸ்ரீனிவாஸ் குமார் நாயுடு ( எஸ்கேஎன்) கிரியேட்டிவ் தயாரிப்பில் இப்போது ராஜா சாப் என்ற பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மாருதி இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால், ராஜா சாப் படத்தில் நடிக்க நடிகர் பிரபாஸ் சம்பளம் என்று ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து வருகிறார். படம் நல்லபடியாக முடியட்டும். அதன்பிறகு பிஸினஸ் எப்படி போகிறது என்பதை பார்த்து விட்டு சம்பளம் பேசிக்கொள்ளலாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆதிபுருஷ் படத்தை ஆந்திராவில் வாங்கி வினியோகித்த வகையில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார் நாயுடுவுக்கு ரூ. 140 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு உதவும் விதமாக ராஜாசாப் படத்தில் சம்பளம் வாங்காமல் பிரபாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஜாசாப் படம் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.





