தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனம் பெற்ற முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த ஆர்யா நான் கடவுள் ராஜா ராணி மதராசப்பட்டணம் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போது அனந்தன் காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ் மலையாளம் என 2 மொழிகளில் தயாராகி வருகிறது.
நடிகர் ஆர்யா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தி ஷோ பீப்பிள் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யா தான் தயாரித்திருந்தார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த படம் காதா் பாட்சா என்ற முத்துராமலிங்கம். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். ஆர்யாவுடன் இந்த படத்தில் சித்தி இத்னானி ஆடுகளம் நரேன் பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதலில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்க மாட்டேன் என்று மறுத்த நிலையில் ஆர்யா இந்த படத்தில் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தில் நடித்த போதுதான், நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். அப்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம், இந்தியில் ரூ. 15 கோடிக்கு விலை போனது. அதனால் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிக்க சம்பளம் பெற மறுத்த நடிகர் ஆர்யா, இந்தி ரைட்ஸ் மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் தந்தை, இந்தி படங்கள் வினியோகஸ்தராக உள்ள நிலையில், மிஸ்டர் எக்ஸ் படமும் ரூ. 15 கோடிக்கு மேல் விலை போகும் என ஆர்யா புது கணக்கு ஒன்றை போட்டிருக்கிறார்.
ஆனால் இப்போது மிஸ்டர் எக்ஸ் படத்தை ரூ. 3.5 கோடிக்கு மட்டுமே இந்தியில் விலை பேசி முடித்திருக்கின்றனர். மார்க்கெட் நிலவரம் குறைந்துவிட்டதால் இதற்கு மேல் விலை கிடைக்காத நிலையில் பலத்த நஷ்டம் ஆர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் இந்தியில் பலத்த அடி வாங்கியதும் மிஸ்டர் எக்ஸ் விலை குறைய முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.





