தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று பேசியிருந்தார். இது கர்நாடகாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. கமல் மன்னிப்பு கேட்டால்தான் தக்லைஃப் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கமல் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்த நிலையில், கன்னட திரைப்பட வர்த்தக சபை தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. இதுகுறித்து கர்நாடகா கோர்ட்டில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்த நிலையில், கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா? மன்னிப்பு கேட்பதில் அவருக்கு என்ன ஈகோ என கேள்வி எழுப்பிய நிலையில் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்தது.
இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கன்னட வர்த்தக திரைப்பட சபை தக்லைஃப் படத்துக்கு தடை விதித்தது அதிகார வரம்பு மீறல் என்று கூறிய நிலையில், சுப்ரீம் கோர்ட் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிடவும், கர்நாடகா அரசு தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் கர்நாடகா நீதிமன்றத்தின் செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க சொல்வது கர்நாடகா கோர்ட்டில் வேலை அல்ல; எந்த காரணத்துக்காகவும் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்குமாறு மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தக்லைஃப் ரிலீஸாகும் படங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்றாலும் தக்லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 3 தமிழ் படங்கள் வெளியாக உள்ளதால் தக்லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட போதிய தியேட்டர்கள் இல்லை.
மேலும் இன்னும் 2 வாரங்களில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தக்லைஃப் படம் வெளியாகி விடும் என்பதால் கர்நாடகாவில் இந்த படத்தை இப்போதைக்கு திரையிட முடியாது என்று வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மணிரத்னம், கமல்ஹாசன் ரசிகர்கள் நிறைந்த தமிழ்நாட்டிலேயே தக்லைஃப் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் பிளாப் ஆகி விட்டது. இதில் கர்நாடகாவில் மட்டும் தக்லைஃப் படம் ரிலீஸானால் பெரிய வசூல் கிடைக்க போகிறதா என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.





