தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியை பெற்றது. இப்போது ரஜினி நடித்த கூலி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அமீர்கான் சவுபின் சாஹிர் நாகர்ஜூனா பகத் பாசில் உபேந்திரா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகி இசையமைப்பாளர் உள்ளிட்ட பல தகவல்கள் விரைவில் தெரிய வரும்.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய 2 படங்களை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் லியோ படம் 2ம் பாகமாக வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டார்.
நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை போலவே மாஸ்டர் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம்தான். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக ஜேடி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படமும் லோகேஷ் கனகராஜூக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படம்தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ரசிகர்கள் எல்லாம் நான் லியோ 2 படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் என்னோட ஆசை மாஸ்டர் 2ம் பாகமாக எடுக்க வேண்டும் என்பதுதான். மாஸ்டர் 2 படத்திற்கான பிராப்பரான ஐடியா என்னிடம் இருக்கிறது. இது விஜய் அண்ணாவுக்கும் தெரியும். விஜய் அண்ணாவை ஜேடி வைபில் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார்.





