தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ், கௌதம மேனன், நரேன், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
தளபதி 69 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இம்மாதம் 4ம் தேதி படத்தின் துவக்க விழா பூஜை நடந்த நிலையில், 5ம் தேதி முதல் கேரளம் மாநிலம் பையனூரில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக விஜய் நடித்த பாடல் காட்சி ஒன்று அங்கு படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம்தான் நடிகர் விஜயின் கடைசி படம் என்று ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார்.
தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் தவெக கட்சி்யினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டுக்கு வர உள்ள தனது கட்சியினர், மற்றும் தொண்டர்கள், ரசிகர்களுக்கு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவ மாணவியர் போன்றவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேரில் வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே டிவியில் அல்லது சமூக ஊடகங்களில் இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள். நேரில் வந்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இதற்கிடையே விசாலை கிராமத்தில் நடக்க உள்ள மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை அமைத்து, 1.5 லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை காண்கின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்நாளில் மழை வந்தால், மழையில் யாரும் நனைந்து விடாதபடி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கி.மீ., தூரத்தில் இருந்து தன்னை நேரில் காண ஆர்வமாக வரும் ரசிகர்கள் தன்னை அருகில் பார்க்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.
அதற்காக விழா மேடைக்கு முன்புறம், பார்வையாளர்கள் மத்தியில் 800 மீட்டர் தூரத்துக்கு ரேம்வாக் எனப்படும் நீளமான நடக்கும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய், மாநாட்டில் மேடை ஏறுவதற்கு முன்பாக இந்த நடைமேடையில் நடந்து வந்து, அங்குள்ள தனது ரசிகர்கள் எல்லாம் நேரில் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் மாநாட்டு மேடைக்கு செல்ல இருக்கிறார். தன்னைக் காணவரும் ரசிகர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை தளபதி செய்திருப்பதாக டிவிகே கட்சியினர் கூறுகின்றனர். இது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.





