இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என்னும் பெருமைக்கு பெயர் பெற்றவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த அவர், நான் ஈ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்தார். ஒரு ஈ, வில்லனை எப்படி பழிவாங்கும் என்ற ஒன் லைன் கான்செப்ட் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் இது ஹிட் அடிக்க, அடுத்ததாக அவரது இயக்கத்தில் வெளிவந்தது பாகுபலி. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம், மிக நேர்த்தியான திரைக்கதை, உறவுகளின் அழுத்தம் என பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் கலக்கியிருந்தார் ராஜமவுலி. இரு பாகங்களிலும் எந்த ஒரு காட்சியையும் குறை சொல்லாத அளவுக்கு கச்சிதமாக அவர் இயக்கியிருந்தார்.
படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ், நாசர் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து அப்படியே வாழ்ந்ததால் பாகுபலி திரைப்படம் மக்களின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்தது. அதிலும் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படி பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ராஜமௌலி அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படமும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வாகை சூடியது.
அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை தட்டி தூக்கியது. இதன் மூலம் உலகறியும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார் ராஜமவுலி. இப்படியான சூழலில் அவரது அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு பதில் கூறும் விதமாக தற்போது மகேஷ்பாபு உடன் இணைந்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி.
படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா வருகிறார். மகாபாரதம் புராணத்தை தழுவி இந்த திரைப்படத்தை ராஜமௌலி இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கென்யாவில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அடர்ந்த காடுகளில் சூட்டிங் செய்து வருகிறார்கள். இப்படி இருக்க உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் முக்கிய காட்சிகளை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டர்களாம். ஆனால் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இது சாத்தியமில்லை என்பதால், வாரணாசி போன்றே ஒரு செட்டை ஹைதராபாத்தில் அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.





