தமிழ் சினிமாவில் செல்லமே படம் மூலம் அறிமுகமானவர் விஷால். அடுத்து திமிரு சண்டக்கோழி தாமிரபரணி சிவப்பதிகாரம் மலைக்கோட்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
முன்பு தயாரிப்பாளர் சங்க தலைவர், இப்போது தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்து வரும் விஷால், அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி விமர்சனத்தில் சிக்கிக் கொள்வது வழக்கம். விஜய் போல இவரும் சைக்கிளில் ஓட்டுப் போட வந்ததெல்லாம் இணையத்தில் வைரலானது.
கடந்த பல ஆண்டுகளாக விஷால் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் சரியாக போகவில்லை. பல படங்கள் பிளாப் படங்களாக படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் கடந்தாண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றி பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. அதனால் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
ஆனால் அதற்கு பின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்த ரத்னம் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. அந்த படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே அவர் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிப்பதாக ஒரு தகவல் இருந்து வருகிறது. தயாரிப்பாளர் யாரும் முன்வராததால் விஷால் சொந்தமாக படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், விஷால் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்துள்ளது. இதில் சம்பளமாக ரூ. 20 கோடி விஷால் கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த தயாரிப்பு நிறுவனம் அட்வான்ஸ் ரூ. 5 கோடி, ஷூட்டிங்கில் ரூ. 5 கோடி, டப்பிங்கில் ரூ. 5 கோடி, படம் ரிலீஸின் போது ரூ. 5 கோடி என 4 தவணைகளாக பிரித்துத் தர ஒத்துக்கொண்டுள்ளது.
ஆனால் விஷால், துப்பறிவாளன் 2 படத் தயாரிப்பு செலவுக்காக பயன்படுத்திக்கொள்ள முதல்கட்டமாக ரூ. 10 கோடி தருமாறு கேட்டிருக்கிறார். அதை தரலாமா, வேண்டாமா என தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கம் விஷாலுக்கு ரெட் கார்டு போட்டுளளது. இதனால் அந்த தொகையை சத்யஜோதி பிலிம்ஸ் தராமல் நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் விஷால் பயங்கர அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.





