இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள “ஜெயிலர்” திரைப்படமானது ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பினை பெறாத வேளையில் இந்த ஜெயிலர் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் ரிலீஸாகும் போது ரஜினி இமயமலைக்கு பயணிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எப்போதுமே ரஜினி ஒவ்வொரு படம் முடித்த பின்னரும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இருப்பினும் 2018-ஆம் ஆண்டு “காலா”, “2.0” படங்கள் முடிவடைந்த பிறகு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றிருந்தார்.

ஆனால் அதன்பிறகு கொரோனா காரணமாக அவர் அந்த பயணத்தை தொடர முடியவில்லை. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தை முடித்த கையோடு அவர் இன்று முழு திரைப்படத்தையும் பார்த்து விட்ட பிறகு இமயமலை செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை மறுதினம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள வேளையில் இன்றே ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட உள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை ரஜினி அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து பார்த்த பின்னர் இன்று இரவு அல்லது நாளை காலையோ அவர் இமயமலை நோக்கி புறப்படுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.





