தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் திரில்லர் திரைப்படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் மகிழ்திருமேனி. அவர் அருண் விஜயை வைத்து எடுத்த தடையற தாக்க திரைப்படத்தையே இதற்கு நாம் உதாரணமாக கூறலாம். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை திரைக்கதையில் விறுவிறுப்பை காட்டி ரசிகர்களை அசர வைத்திருப்பார் இயக்குனர்.
இதனைத் தொடர்ந்து அவர் ஆர்யாவை வைத்து மீகாமன் திரைப்படத்தை இயக்கினார். படம் அந்த நேரத்தில் திரையரங்குகளில் பெரிய அளவு ஓடவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக அது தற்போது வரை பாராட்டைப் பெற்று வருகிறது. இதேபோல் மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான தடம் திரைப்படமும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது.
இதில் அருண் விஜய் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஒரு கொலை அதை செய்தது இரட்டை சகோதரர்களில் எந்த அருண் விஜய் என்பதை கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக கொடுத்திருப்பார் இயக்குனர். உதயநிதியை வைத்து அவர் எடுத்த கலகத் தலைவன் திரைப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
இப்படியான சூழலில் மகிழ் திருமேனிக்கு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்க, அவர் விடாமுயற்சி திரைப்படத்தை எடுத்தார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றது. அஜர்பைஜான் நாட்டில் படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டன. இப்படியான சூழலில் இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
காணாமல் போகும் தனது மனைவியை கண்டுபிடிக்க போராடும் அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஜித் குமார். படம் காட்சி ரீதியாக பிரம்மாண்டமாக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்பாக அமையாததால் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக அஜித்திற்கான மாஸ் காட்சிகளும் மிக மிக குறைவாகவே இருந்தது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது.
இப்படியான சூழலில் மகிழ் திருமேனி இயக்கியிருந்த தடையறத் தாக்க திரைப்படம், திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர், இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்ததை விட இணையத்தில் பார்த்தவர்கள் தான் அதிகம். அவர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்திருந்தால் இது மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும் என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 13 ஆண்டுகள் கழித்து, விடாமுயற்சி திரைப்படம் வந்திருந்தால் பிளாக்பஸ்டர் ஆகி இருக்குமா என்று கேட்டார். இதற்கு பதில் கூறிய இயக்குனர், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ரசிகர்கள் நினைத்தால்தான் படம் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.





