நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் இப்போது தனது 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறார். அதாவது அவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டது. 1975ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி ரஜினி நடித்து நடிகராக அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.
அதே போல் இப்போது 2025ம் ஆண்டில் ரஜினி நடித்த 171வது படம் கூலி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பயணித்த நடிகர் ரஜினிகாந்த் 171 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இப்போது 172வது படமாக ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டில்தான் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்தார். தனது அண்ணன் சத்ய நாராயண ராவ் அவரது பராமரிப்பில் வளர்ந்தார். அரசு பஸ்சில் கண்டக்டராகவும் பணிபுரிந்தார். அப்போது அதே பஸ்சில் டிரைவராக இருந்த ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர்தான் ரஜினியை சினிமாவில் நடிக்குமாறு அறிவுறுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
சினிமாவில் பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக மக்கள் எதிர்பார்த்தும் அவர் அரசியலுக்கு வராமல் ஏமாற்றம் தந்துவிட்டார். அதே நேரத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் ஆகியோர் அரசியல் களத்தில் நிற்கின்றனர். இதில் திமுக ஆதரவாளராக கமலும், திமுகவின் எதிர்ப்பாளராக விஜயும் அரசியல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா ராவ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசியலில் விஜய் ஜெயிப்பது என்பது ரொம்பவும் கஷ்டம். ஆனால் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை மிகவும் புத்திசாலி. அவர் மிகவும் நன்றாக வருவார் என்று சத்யநாராயணா ராவ் கூறியிருக்கிறார்.
மேலும் தனது சகோதரர் ரஜினிகாந்த் குறித்து, நடிகர் கமல்ஹாசன் போல ரஜினியும் எம்பி ஆவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்ய நாராயணா ராவ், கவர்னர் பதவியே தேடி வந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாஜக சார்பில் ரஜினிக்கு கவர்னர் பதவி தர முன்வந்திருக்கிறார்கள் என்ற ரகசியத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.





