சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதே சமயம் அதிகபடியாக இணையத்தில் அந்த திரைப்படம் கிண்டல் செய்யப்பட்ட நிலையில், எதிர்பார்த்த வசூலையும் பெற முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா கைகோர்த்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது.
இதுவும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் படம் குறித்து பலரும் இணையத்தில் அதீதமாக கலாய்த்தனர். திரையரங்குகளில் ஒரு பக்கம் கூட்டம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் இணையத்தில் வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை பார்க்க முடிந்தது. இருப்பினும் படக்குழு இதனை கண்டு கொள்ளவே இல்லை.
ரெட்ரோ வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, படமும் டிஜிட்டல் திரையரங்கு சேட்டிலைட் உரிமை ரீதியாக எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது என்ற விவரங்களையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. கருப்பு என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இதனை எடுத்திருக்கிறார்கள்.
இதில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். லப்பர் பந்து சுவாசிகா, நட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். படத்தில் சூர்யாவுக்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. அதில் ஒன்று அய்யனார் கதாபாத்திரம் எனவும் மற்றொன்று வழக்கறிஞர் ரோல் என்றும் கூறுகிறார்கள். இந்த திரைப்படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்திலேயே சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்டலூரியுடன் கைகோர்த்தார். ஏற்கனவே இவர் தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல கடந்த முறை, துல்கர் சல்மானை வைத்து அவர் எடுத்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
இப்படியான சூழலில் சூர்யா – வெங்கி காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்கிறார். இந்த திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் வெங்கி, இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இருக்கும். மானுட உணர்வுகளை போற்றும் திரைப்படமாகவும் இது அமையும். கஜினி திரைப்படத்தில் இடம் பெற்ற சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்று சூர்யா சாருக்கு இந்த கேரக்டர் அமையும் என்று தெரிவித்துள்ளார்.





