பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். சிறுவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சிறுவர்களை வைத்து அற்புதமான கதையை கொடுத்து பலரது பாராட்டையும் பெற்றார் இயக்குனர். இந்த திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் அவர் பெற்றார்.
இதனை தொடர்ந்து பலரது பார்வையும் பாண்டிராஜ் பக்கம் திரும்ப அவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இதில் மிக முக்கியமாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை கூறலாம். கார்த்தி நடித்து வெளிவந்த இந்த திரைப்படம், பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
ஒரு குடும்பத்தில் அக்கா தம்பிகளுக்கு இடையே ஏற்படும் சிக்கலையும், உறவுகளின் பிரச்சனைகளையும் கூறி அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்து பலரது பாராட்டையும் இயக்குனர் பெற்றார். தாமிரபரணி உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது கடைக்குட்டி சிங்கம்.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தை எடுத்து விட்டுக்க பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படியான சூழலில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் தலைவன் தலைவி திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வருகிறார். பேரரசி என்னும் ரோலில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற அதில் பாண்டிராஜ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
எனது மகனின் பிறந்தநாளுக்காக குலதெய்வம் கோயிலுக்கு செல்லும்போது இரண்டு கதாபாத்திரங்களை பார்த்து அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறேன். எப்படி எனது கடைக்குட்டி சிங்கம் பார்த்து அக்காள் தம்பி மீண்டும் சேர்ந்தார்கள் என்று பலரும் கூறினார்களோ அதே போல தான் இதுவும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும். விவாகரத்து விஷயத்தை இந்த திரைப்படத்தில் நான் பேசியிருக்கிறேன். இந்தப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விவாகரத்து முடிவில் இருப்பவர்கள், அதை எடுக்க வேண்டுமா என்று சிந்திப்பார்கள் என்று கூறியுள்ளார்.





