தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் கவின். சின்னத்திரையில் ஒரு சீரியலில் வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்த அவர், தனக்கு கிடைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதில் கவின் அணுகுமுறை இங்கு பலருக்கு பிடித்துப் போனது.
அங்கிருந்து வெளியே வந்த கவின், லிஃப்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். பிறகு திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிய முயற்சி எடுத்த அவருக்கு, டாடா திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாகும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கவினின் முதிர்ச்சியான நடிப்பை பாராட்டிய ரசிகர்கள், அந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்தனர். இதன் பிறகு கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் அண்மையில் அவர் நடித்த ஸ்டார் திரைப்படம் வெளியானது.
ஆனால் அது விமர்சன ரீதியாக, பெரிய அளவு எடுபடவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் இல்லாத போதும், வசூல் ரீதியாக ஸ்டார் வெற்றி பெற்றது. அடுத்ததாக கவின் கிஸ் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதுபோக, கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம் இரண்டு விஷயங்கள். ஒன்று இயக்குனர் நெல்சன் இதன் தயாரிப்பாளராக இருப்பது. இன்னொன்று படத்திற்காக கவின் போட்டிருக்கும் கெட்டப். இது இரண்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பதால், பிளடி பக்கருக்கு இங்கு எதிர்பார்ப்பு உள்ளது. இது போக வெற்றிமாறன் தயாரிப்பில், மாஸ்க் என்னும் திரைப்படத்திலும் கவின் நடித்து வருகிறார். இதில் ஆண்ட்ரியாவுக்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி மூன்று திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்க, அதற்கு அடுத்த திரைப்படத்திற்கான வேலையையும் கவின் தொடங்கி இருக்கிறார். இதனை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குகிறார். நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர் படத்தில் கதாநாயகனை விட மூத்தவராக நடிப்பதாகவும், அவரை கவின் காதலிப்பது போன்றும் கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு, இந்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.





