சிவகார்த்திகேயன் தற்போது மதராசி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இதுபோக மலையாள நடிகர் பிஜுமேனன், விக்ராந்த், வித்யூட் ஜமால் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் நிலையில் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதராசியை தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை சுதா கொங்கரா இயக்குகிறார்.
ஏற்கனவே அவர் சூர்யாவுடன் இணைந்து புறநானூறு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அதே வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு சென்று அது படமாக்கப்பட்டு வருகிறது. ரவி மோகன் படத்தில் வில்லனாக நடிக்கும் நிலையில் ஸ்ரீ லீலா அதர்வா உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
பீரியட் திரைப்படமாக எடுக்கப்படும் இதன் சூட்டிங் சென்னை, காரைக்குடி, சிதம்பரம் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதன் படபிடிப்பு சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இதன் சூட்டிங் மீண்டும் தொடக்கப்பட்டு பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, குட் நைட் இயக்குனர் விநாயக் சந்திரசேகருடன் சிவகார்த்திகேயன் இணைவதாக இருந்தது. இதே போல் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உடனான படம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் அவர் விநாயக் சந்திரசேகர் உடனேயே இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதன் பணிகளை சிவகார்த்திகேயன் தள்ளி போட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தந்தையாக மோகன்லால் நடிக்க இருந்ததாகவும், தற்போது கால் சீட் காரணமாக அவர் நாட்கள் தள்ளி கொடுத்திருப்பதால், படத்தின் பணிகளை ஒத்தி வைக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில்தான் அவர் வெங்கட் பிரபுவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம். வெங்கட் பிரபுவின் கோட் படத்தின் போதே இது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டம் கைகூடி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் பேசுகிறார்கள்.





