தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் புரட்சிக் கலைஞர் என்றும் பின்னாளில் கேப்டன் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 71வது வயதில் மறைந்தார். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். இப்போது அவரது இளைய மகன் சண்முக பாண்டியனும் நடிகராக உள்ளார்.
சினிமாவில் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் ஒரு படம் மைல்கல் என்று சொல்லும் விதமாக அமைந்து விடும். அப்படி மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு அவரது நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் மைல் கல் படமாக அமைந்தது. இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் சரத்குமார் ரம்யாகிருஷ்ணன் மன்சூர் அலிகான் ரூபிணி லிவிங்ஸ்டன் பீலிசிவம் காந்திமதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
கேப்டன் பிரபாகரன் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆட்டமா தேரோட்டமா பாடல் இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது. சந்தன மரக்கடத்தல் வீரப்பன் கதையை கொண்டு உருவாக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்த பிறகு தான் நடிகர் விஜயகாந்தை கேப்டன் என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர்.
இந்த படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து போலீசாரையே அடிப்பது, குற்றங்களுக்கு துணை போகும் கலெக்டர், ஐஜி போன்ற உயரதிகாரிகளிடம் நேருக்கு நேராக மோதுவது, அரசியல்வாதிகளை நேரடியாக விமர்சிப்பது என பல காட்சிகளில் விஜயகாந்த் துணிச்சலாக நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் ஒருவரை தவிர வேறு யாராலும் இதுபோன்று அரசியல் காட்சிகளில் தைரியமாக நடித்திருக்க முடியாது என்று பலரும் பாராட்டிப் பேசினர்.
அதன் காரணமாகவே இப்போது வரை நடிகர் விஜயகாந்தை அவர் ரசிகர்கள் மற்றும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் கேப்டன் என்றுதான் குறிப்பிட்டுச் சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1990 ஆம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் படம் வெளியான நிலையில், 34 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பல ஹீரோக்களுக்கு 100வது படம் தோல்வியடைந்த நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு மட்டுமே 100வது படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் படத்தை ரி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. 4கே தரத்திலும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையிலும் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு கேப்டன் பிரபாகரன் படம் ரி ரிலீஸ் ஆகிறது. வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் ஆகும். அதை முன்னிட்டு 3 தினங்கள் முன்னதாகவே ஆகஸ்ட் 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் படத்தை வெளியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





