தமிழ் சினிமாவில் தனது சிறந்த படைப்புகளால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா தவமாய் தவமிருந்து ஆட்டோகிராஃப் பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு பாண்டவர் பூமி என சேரன் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவை. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சேரன்.
சமீபத்தில் இயக்குனர் சேரன் தனது வலைதள பக்கத்தில், புதிய பயணம் துவங்குகிறேன். விடியல் ஆரம்பம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், என்னது இயக்குனர் சேரனும் அரசியல் களத்தில் குதிக்க போகிறாரா, விடியல் ஆரம்பம் என்பது ஆளுங்கட்சியின் டயலாக் ஆச்சே என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஆனால் இயக்குனர் சேரன் அரசியல் களத்தில் எதுவும் குதிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி எனப்படும் பாமக அரசியல் கட்சி குறித்துதான் ஒரு படம் இயக்க உள்ளார். அதாவது பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை கதையை தான் அவர் படமாக இயக்க உள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ள டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, டைரக்டர் சேரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படமாக உருவாகிறது. இதில் ராமதாஸின் இளம் வயது நிகழ்ச்சிகள், டாக்டராக அவர் பணி செய்துகொண்டே பின் தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை போக்கவும், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறவும்
தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி துவங்கியது என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு படமாக இது உருவாகிறது.
டாக்டர் ராமதாஸின் பயோபிக் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராமதாஸ் கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. ஆனால் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போது பாமக கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பல பிரச்னைகள், உட்கட்சி பூசல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் டைரக்டர் சேரன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு கதையை படமாக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மற்ற அரசியல் தலைவர்கள் கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது ஏனெனில் கடந்த 30, 40 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முக்கிய கூட்டணி கட்சியாக தேர்தல் களத்தில் இருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.





