இப்போதும் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகர் யார் என்று 50 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் உடனே சொல்வது எம்என் நம்பியார் என்ற பெயராக தான் இருக்கும். ஏனென்றால் கடந்த 1960 70 களில் வில்லன் நடிப்பில் ரசிகர்களை மிரட்டியவர் எம்என் நம்பியார் தான். திரையில் அவரை காட்டினாலே, அவரை தகாத வார்த்தைகளில் திட்டும் பெண்களும் இருக்கவே செய்தனர்.
ஆனால் சினிமாவில்தான் கொடூர வில்லனாக கதாநாயகனுக்கு பாதகங்கள் செய்பவராக எம்என் நம்பியார் நடித்திருப்பாரே தவிர, உண்மையில் அவரை போன்ற நற்குணங்களும் கடவுள் பக்தியும் கொண்டவர் யாருமில்லை என்றே சொல்லலாம். புகை பிடிப்பது மதுப்பழகம் என்று எந்தவிதமா கெட்ட பழக்கமும் இல்லாதவர். சபரிமலை ஐயப்பன் மீது அதீத பக்தி கொண்டவர்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரை சபரிமலைக்கு அழைத்து சென்ற குருசாமியே எம்என் நம்பியார்தான். அதே போல் உணவு பழக்கத்தில் கூட மிக கட்டுப்பாடாக இருப்பவர். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் அங்கு தன் மனைவியுடன் சென்று அவர் சமைத்த உணவை தான் நம்பியார் சாப்பிடுவது வழக்கம். சென்னையில் ஷூட்டிங் என்றால் வீட்டிலிருந்தே அவருக்கு உணவு வந்துவிடும்.
எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு வில்லனாக எம்என் நம்பியார் நடித்திருப்பார். எம்ஜிஆருடன் நடித்த பல வில்லன் நடிகர்களில் எம்என் நம்பியார்தான் முதன்மையானவர். அதனால் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான நட்பு உண்டு. எம்ஜிஆர் பெரிய நடிகரான பிறகு பலரும் அவர் காலில் விழ ஆர்வமாக இருப்பார்கள்.
அதே போல் எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்துக்குள் வந்தால் அவரை பார்த்தவுடன் எல்லோருமே எழுந்து நின்று மரியாதை செய்வது வழக்கம். ஒருமுறை எம்ஜிஆர் அப்படி படப்பிடிப்பு செட்டுக்குள் வந்த போது மற்ற அனைவரும் வேகமாக எழுந்து நின்ற நிலையில், நம்பியார் மட்டும் அமர்ந்துக்கொண்டே இருந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த இயக்குனர் பா நீலகண்டன், சின்னவர் வருகிறார், எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருக்கீங்களே என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு நம்பியார் கூலாக, அவரும் நடிகர் நானும் நடிகர். நான் எதற்காக அவர் வந்தவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்று எம்ஜிஆர் காதுபடவே சத்தமாக கேட்டிருக்கிறார். இதை கேட்ட எம்ஜிஆர் சிரித்தபடியே அங்கிருந்து சென்று இருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் எம்என் நம்பியாருக்கு திருமணம் நடந்த போது, அவருக்கு மாப்பிள்ளை தோழராக இருந்தது வேறு யாருமில்ல. மக்கள் திலகம் எம்ஜிஆர்தான் அவருக்கு மாப்பிள்ளை தோழராக இருந்து தனது நட்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.





