பாலிவுட் சினிமாவில் சீனியர் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவரது மகன் அபிஷேக் பச்சன் மருமகள் ஐஸ்வர்யா ராயும் இந்திய சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்து வருகின்றனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிகர் ரஜினியுடன் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அவர் வெளியிட்ட ஒரு வலைதள பதிவுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் காலை ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் மருந்து அறுவை சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவு போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருந்தார்.
எனவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் பலரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். இந்த நிலையில் அது தனது உடல்நிலை பற்றியது அல்ல என்றும் மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் நடிகர் அமிதாப்பச்சன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது குறித்து அவர் அந்த பதிவை எழுதியதாகவும் விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ஒரு புதிய பதிவில் கூறியிருப்பதாவது, நான் நலமாக இருக்கிறேன். எனது முந்தைய பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஒரு உதாரணத்திற்காகவே அதை எழுதினேன்.
ஒரு சாம்பியன் வீரர் கடுமையான தோல்விக்கு விளிம்பில் இருக்கும்போது ஏற்படும் மனரீதியான மற்றும் உடல் ரீதியான பாதிப்பை குறிக்கவே அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்சி காலத்தை நான் ஒரு உவமையாக பயன்படுத்தினேன். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சியின் தோல்வியை குறிப்பிட்டு தான் நான் எழுதினேன்.
ஒரு அறுவை சிகிச்சை அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய பிறகு நமது உடல் நிலையை கையாள்வது தான் மிகவும் கடினமான காலம். அதேபோல் ஒரு சாம்பியன் தோற்கும் போது அந்த தோல்வியின் பாதிப்பிலிருந்து தன்னை மீட்டெடுப்பது தான் மிகவும் கடினமான காலம். மெஸ்சியை ஒப்பிட்டு நான் குறிப்பிட்டிருந்ததை அதை என்னைப் பற்றியது என்று மக்கள் தவறாக கருதி விட்டனர் என்று நடிகர் அமிதாபச்சன் அந்த பதிவில் விளக்கம் தந்துள்ளார்.





