நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் வெளிநாடுகளில் நடந்த வரும் கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பகல்ஹாம் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பகல்ஹாம் தாக்குதல் சம்பவம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என நம்புகிறேன்.
இந்த சூழலில் ஜாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இன்று ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள்.
குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக நம் நாட்டுக்குள் நாம் ஒருவருக்கொருவர் மதிக்கவும் ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிட வேண்டாம். அமைதியான சமூகமாக வாழ்வோம் என்று நடிகர் அஜீத்குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.





