பிரபல யூடியூப்பராக இருந்து வருபவர் ஜிபி முத்து. தூத்துக்குடியை சேர்ந்தவர். இவரது தூத்துக்குடி பாஷையும் பேச்சும் இவரை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்றது. பல நேரங்களில் இவர் சிலரை தாறுமாறாக திட்டுவதும் காமெடியாக ரசிக்கப்பட்டது. விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியில் ஒருமுறை போட்டியாளராகவும் பங்கேற்றார். ஆனால் 2 வாரங்களில் அவராகவே வெளியேறி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஜிபி முத்துவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. மேலும் பல நிகழ்ச்சிகளில் விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகவும் ஜிபி முத்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் ஜிபி முத்து ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
தொடர்ந்து சில படங்களில் சிறுசிறு காட்சிகளில் ஜிபி முத்து நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் பங்கேற்றார். அப்போது ஜிபி முத்து, சசிக்குமாரிடம் வீடியோகாலில் வந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் ஜிபி முத்துவிடம் பேசிய நடிகர் சசிக்குமார், உங்கள் குழந்தைகள் எப்படி உள்ளனர், மனைவி நலமாக உள்ளார்களா என்று நலம் விசாரித்தார்.
அதன்பிறகு சசிக்குமாரிடம் பேசிய ஜிபி முத்து, எனக்கு உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். எனக்கு நல்ல பாசமான கடிதங்களும் வரும். அந்த கடிதங்களை உங்களுடன் அமர்ந்து படிக்க வேண்டும். அப்படி ஒரு வீடியோ எடுக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகர் சசிக்குமாரிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த நடிகர் சசிக்குமார், அடுத்ததாக தூத்துக்குடி திருநெல்வேலி பக்கம் எடுக்கும் ஒரு படத்தில் நான் நடிக்கிறேன். அப்போது உங்க ஊர் பாஷை பேசி தான் நடிக்கப் போகிறேன். நிச்சயமாக என்னுடன் நீங்கள் சேர்ந்து நடிக்கலாம். ஆனால் உங்களை நிறைய பேர் பாலோ செய்கிறார்கள். உங்கள் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.
அதனால் நீங்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். வீடியோக்களில் நல்ல முறையில் பேச வேண்டும். உங்களுக்கும் பொறுப்பு கூடியிருக்கிறது. இது என்னுடைய கோரிக்கை என்றார். அதற்கு பதிலளித்த ஜிபி முத்து உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொறுப்பாக வீடியோக்களில் பேசுகிறேன் என்று கூறிய அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





