நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். அவர் படித்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். பெங்களூருவில் பஸ் கண்டக்டராக ஆரம்பத்தில் பணி செய்த ரஜினிகாந்த், கடந்த 1974- 75ம் ஆண்டுகளில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். பிறகு கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார்.
பெங்களூருவில் இருந்த போது ரஜினியின் பெயர் சிவாஜி ராவ் தான். படத்தில் நடித்த போதுதான் அவரது பெயரை ரஜினிகாந்த் என கே பாலசந்தர் மாற்றினார். அப்படி சிவாஜ் ராவ் ஆக இருந்தபோது ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ராஜ் பகதூர். இன்று வரை அவர்களது நட்பு நெருக்கமாக தொடர்ந்து வருகிறது. படையப்பா காலா போன்ற படங்களில் ராஜ் பகதூரும் சில காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கூறியதாவது, நானும் ரஜினியும் டிரைவர் மற்றும் கண்டக்டராக பஸ்சில் பணிபுரிந்தோம். எங்களது நட்பு 53 ஆண்டுகளாக தொடர்கிறது. எவ்வளவு பெரிய நட்சத்திரமாக ரஜினி இருந்தாலும் அப்போது போல்தான் இப்போதும் பேசுகிறார். என்னுடன் பழகுகிறார்.
எங்கள் உடல்கள் மட்டும்தான் வேறு. ஆனால் எங்கள் ஆன்மாக்கள் ஒன்றுதான். நாங்கள் அடிக்கடி சினிமா பார்க்க போவோம். அப்போது அவரிடம் இருந்த சினிமா ஆர்வத்தை பார்த்து சினிமாவுக்கு முயற்சி செய் என்று சொன்னேன். எனக்கு யார் வாய்ப்பு தருவார்கள் என்று ரஜினி என்னிடம் திருப்பிக் கேட்டார். உன் திறமை உனக்கு தெரியாது. உன் கண்களில் ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னேன்.
பஸ்சில் நடத்துனராக இருந்த காலத்திலேயே ரஜினி மிகவும் ஸ்டைலிஸ்சாக இருப்பார். அவர் ஸ்டைலாக தான் பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பார். முக்கியமாக தனது சிகை அலங்காரத்தை ஒருபோதும் கெடுத்துக்கொள்ள மாட்டார். பஸ்ஸில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் டிக்கெட் எளிதாக வழங்கி விடுவார்.
எப்போதும் தனது தலைமுடியை ரஜினி சீவிக் கொண்டே இருப்பார். சிக்னலில் பஸ் நின்றால் இறங்கி ஸ்டைலாக நின்று சிகரெட் பிடிப்பார். தனது தலைமுடியை அதிகமாக சீவினார். அதனால் தான் அனைத்தும் சீக்கிரத்தில் உதிர்ந்து விட்டது. இதுதான் அவரது வழுக்கைக்கு காரணம். தலைமுடியை ஸ்டைல் செய்து ஸ்டைல் செய்து விரைவில் முடியை அவரே உதிர்த்து விட்டார் என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





