தமிழக மக்கள் எப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போகிறார் என பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத சூழலில் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் நடிகர் கமல்ஹாசன்.
கடந்த 2018ம் ஆண்டில் அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் ஆரம்பத்தில் திமுக வை கடுமையாக எதிர்த்தார். குடும்ப அரசியல் என்று ஸ்டாலின் உதயநிதி போன்றவர்களை வசைபாடினார். அவரது கட்சி சின்னமான ஸ்டார்ச் லைட்டால் டிவியை எல்லாம் போட்டு உடைத்தார். திமுக பாஜக கட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சி மேடைகளிலும் குத்திக்காட்டி பேசிக்கொண்டு இருந்தார்.
ஆனால் சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மக்கள் நீதிமய்யத்துக்கு கிடைத்த மோசமான அடியும் பலமான தோல்விகளும் இனி தனித்து நின்றால் அடையாளமின்றி போய்விடுவோம் என்ற சூழலுக்கு வந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் திமுகவின் விசுவாசியாக மாறி ஸ்டாலின், உதயநிதியிடம் தஞ்சமடைந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவரது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுகவுக்காக கமல்ஹாசன் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்த நிலையில், அதற்கு பதில் உதவியாக திமுக தரப்பில் அவருக்கு ராஜ்யசபா எம்பி வாய்ப்பை வழங்க முன்வந்தது.
நடிகர் கமல்ஹாசன், கடந்த 25ம் தேதி ராஜ்ய சபா எம்பியாக பதவியேற்ற நிலையில் முதல் முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் எம்பி கமல்ஹாசன் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன்.
ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்து இருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்று அந்த பதிவில் நடிகர் கமலஹாசன் கூறியிருக்கிறார்.





