இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் ஷங்கர். அதன்பிறகு கடந்த 1993ம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் என்ற படத்தை இயக்கி இயக்குனராக ஷங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து காதலன் இந்தியன் ஜீன்ஸ் பாய்ஸ் முதல்வன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தார்.
இதில் நடிகர் அர்ஜூன் நடித்த முதல்வன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்தியில் அந்தப் படத்தை நாயக் என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார். தொடர்ந்து தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் கடந்த ஆண்டில் இந்தியன் 2 படத்தை கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் என்ற படத்தை ஷங்கர் இயக்கினார். இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான முதல் படம் இதுதான். ஆனால் முதல் படமே ஷங்கருக்கு பலத்த தோல்வி படமாக அமைந்துவிட்டது. கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர். டாக்டராக இருந்தும் சினிமா ஆர்வம் காரணமாக அதிதி ஷங்கர் நடிக்க வந்து விட்டார். அவர் தமிழில் நடிகர் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் நடிகர் முரளியின் 2வது மகன் ஆகாஷ் உடன் நேசிப்பாயா ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஆனால் இந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதனால் தமிழில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் அமையவில்லை. அதனால் நிறைய விளம்பர படங்களில் அதிதி ஷங்கர் நடித்தார். இயக்குனர் ஷங்கர் மகளாக இருந்தும் அதிதி ஷங்கர் தமிழ் படங்களில் வாய்ப்பின்றி விளம்பர நடிகையாக மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது.
இந்நிலையில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் நாயகனாக நடித்த பைரவம் என்ற தெலுங்கு படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமானார். கடந்த மே 30ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. ஆனால் இந்த படமும் அதிதி ஷங்கருக்கு தோல்வி படமாக அமைந்துவிட்டது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் அவரது மகள் அதிதி ஷங்கர் இருவருக்குமே தெலுங்கில் அறிமுகமான அவர்களது முதல் படமே தோல்வி படமாகி விட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.





