நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படங்கள் என்பது சமீப காலமாக அமையவே இல்லை. குறிப்பாக கதாநாயகியை பிரதானப்படுத்தி அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஓடவில்லை. கனெக்ட், அன்னபூரணி எனக்கு எந்த திரைப்படமும் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த டெஸ்ட் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. நேரடியாக ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. மாதவன் சித்தார்த் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஆனால் தொய்வான திரைக்கதையால் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இருப்பினும் நயன்தாராவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. ராக்காயி என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதேபோல் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் பணியாற்றி வருகிறார்.
சுந்தர் சி இயக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பது ஐசரி கணேஷ். இதற்காக சென்னையில் மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் என்றும் கூறப்படுகிறது. ஒன்று நம் அனைவருக்கும் தெரிந்த அம்மன் கதாபாத்திரம். மற்றொன்று போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் வருவதாக சினிமா துறையினர் கூறுகிறார்கள்.
இதுபோக இளம் நடிகர் கவினுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இந்த திரைப்படத்திற்கு ஹாய் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பாடல் ஆசிரியர் விஷ்ணு எடவன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படியான சூழலில் தற்போது நயன்தாராவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த முறை அவர் தெலுங்கு சினிமாவில் பயணம் செய்கிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன்தான் அவர் கைகோர்த்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 157 வது திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட சூழலில்தான் நயன்தாரா ப்ராஜெக்ட்டில் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது.





